
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கப்பனூர் கிராமத்தில் 21 வயதுடைய இளம் பெண்ணும் உறவினரான ராமு என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ராமு இளம்பெண்ணுடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமானார். இதுகுறித்து தனது காதலனிடம் தெரிவித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு கர்ப்பத்தை கலைத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என மிரட்டி ராமு கர்ப்பத்தை கலைக்க வைத்துள்ளார்.
அதன் பிறகு ராமு அந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராமுவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ராமுவுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.