இந்தியாவில் பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், பசுவை பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்காக அறிவிப்பதற்கான முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதாவது பசுவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்மீது பதியப்பட்ட வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என முகமது அப்துல் ஹாலிக் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அனைத்து மதத்தினருக்கும் உரிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டும். மதசார்பற்ற இந்தியாவில் நாம் வாழ்கிறோம்.

இந்து மதத்தினர் பசுவை தெய்வமாக வணங்குகிறார்கள். வேதகாலத்தில் இருந்தே பால் தரும் பசுக்களை கொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பசு தரும் பால் மூலம் பல்வேறு ஊட்டச்சத்து பொருட்கள் தயாரிக்கப்படுவதால் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும் பசுக்களை கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே பசு வதையை தடுக்கவும், பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்காக பசுவை அறிவிக்கவும் வேண்டிய முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கூறியது. மேலும் முகமது அப்துல் காலிக் தாக்கல் செய்திருந்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.