உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் கிரிக்கெட் மற்றும் அரசியல் உலகம் ஒன்று சேர்ந்த விழாவாக, இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜ் ஆகியோரின் நிச்சயதார்த்த விழா நடைபெறவுள்ளது.

ஜூன் மாதம் லக்னோவில் உள்ள ஒரு சிறப்பு இடத்தில் இந்த விழா நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விழாவில் அரசியல் மற்றும் விளையாட்டு துறையின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியா சரோஜ், வாரணாசி அருகேயுள்ள பிந்த்ரா தாலுகாவின் கார்கியான் கிராமத்தைச் சேர்ந்தவர். 2024 மக்களவைத் தேர்தலில், மச்லிஷஹர் தொகுதியிலிருந்து சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

வெறும் 25 வயதில் எம்.பி. ஆன அவர், உத்தரப்பிரதேசத்தின் இரண்டாவது இளைய மக்களவை உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். தற்போதைய எம்எல்ஏ தூபானி சரோஜின் மகளான பிரியா, கடந்த 7 ஆண்டுகளாக சமாஜ்வாதி கட்சியில் அரசியல் செயலில் உள்ளார்.

ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் இருவரும் ஒரு நெருங்கிய நண்பரின் மூலம் சந்தித்து பழக தொடங்கியதாக கூறப்படுகிறது. அந்த நண்பரின் தந்தை ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதால், இந்த அறிமுகம் ஏற்பட்டது. அதிலிருந்து இருவருக்கும் இடையில் நெருக்கம் அதிகரித்து, ஜனவரி மாதத்தில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

தற்போது குடும்பத்தினரின் சம்மதத்துடன், நவம்பர் மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள திருமண விழாவிற்கு முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. லக்னோவில் நடைபெறவுள்ள நிச்சயதார்த்த விழா, பிரபலங்களின் வருகையால் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய நிகழ்வாக இருக்க உள்ளது.