ஐபிஎல் 2025 சீசனின் மூன்றாவது போட்டியாக இன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே ஆட்டம் நடைபெற உள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த ஆட்டத்தில், சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீண்டும் தமது அணிக்காக களமிறங்க இருப்பது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு 4 கோடி ரூபாய்க்கு “அன் கேப்டு” வீரராக retention செய்யப்பட்ட தோனி, தொடர்ந்து விளையாட உள்ளார் என்பது உறுதி.

தோனி ஓய்வு பெறப்போகிறார் என்ற வதந்திகள் கடந்த சில ஆண்டுகளாகவே வலம் வந்தாலும், அவர் இதுவரை தனது ஓய்வு குறித்து எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில்லை. வயது மற்றும் முழங்கால் பிரச்சனைகள் இருப்பதாலும், சமூக வலைதளங்களில் இந்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே ஜியோ சினிமாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தோனி, “நான் சக்கர நாற்காலியில் இருந்தாலும், சிஎஸ்கே என்னை விட்டுவிடாது. இது என்னுடைய அணி. எப்போதும் இதற்காகவே விளையாட விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

இன்றைய போட்டி சென்னை மைதானத்தில் நடைபெறுவதால், தோனிக்கு வரும் ஆதரவு இருமடங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் எந்த மைதானத்திலும் தோனி களமிறங்கும் போதெல்லாம் பெரும் வரவேற்பு ஏற்படுவது வழக்கம். அதுவும் சொந்த மைதானம் என்பதால் அவரது ரசிகர்கள் பெரும்பான்மையாக திரண்டுவிடுவர். மேலும் இந்த போட்டியை காண ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வர தொடங்கிவிட்டனர்.