ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்திறன் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இதுவரை  9 போட்டிகளில் 7 தோல்வி அடைந்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சிஎஸ்கே அணியின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதனை தொடர்ந்து  கடந்த ஏப்ரல் 25 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் சேப்பாக்கில் நேர்ந்த தோல்விக்கு பிறகு, சிஎஸ்கே சொந்த மண்ணில் 4 போட்டிகளில் தோல்வியடைந்து, பிளேஆஃப் கனவை இழந்துள்ளது.

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு வழங்கிய பேட்டியில், ரெய்னா கூறுகையில், “தோனி சில வீரர்களின் பெயர்களை மட்டுமே பரிந்துரைப்பார். ஆனால், முழு ஏலச் செயல்முறையில் அவர் ஈடுபடுவதில்லை. அதன் அடிப்படை பொறுப்பை  நிர்வாக அதிகாரி காஷி விஸ்வநாதன் மேற்கொள்கிறார்” என்றார். மேலும், ஏலக் குழு தேர்வில் தோனியின் பங்கு குறைவாகவே இருக்கும், அணியின் இந்த மோசமான நிலைக்கு தோனியை நேரடியாகக் குற்றம் சொல்ல முடியாது” என கூறினார்.

தற்போது  43 வயதானத தோனி  இன்னும் விக்கெட் கீப்பிங் செய்து, கேப்டனாக அணியை முன்னின்று வழிநடத்துகிறார். ஆனால் மற்ற வீரர்கள் தோனியின் முயற்சிக்கு சற்றும் நிகராக செயல்படவில்லை என்றும் கடுமையாக விமர்சித்தார். மேலும்  “18 கோடி, 17 கோடி, 12 கோடி ரூபாய் பெறும் வீரர்கள் என்ன செய்கிறார்கள்? அடுத்தடுத்து தோல்விகள் நிகழ்கின்றன, அதே தவறுகள் திரும்ப திரும்ப நடக்கின்றன” என்று ரெய்னா திட்டவட்டமாக கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலை மற்றும் வருத்தத்தை உருவாக்கியுள்ளது.