மயிலாடுதுறை புதுத்தெருவில் ஜீவானந்தம் (57) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியில் கடந்த 2012ம் ஆண்டு முதல் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வங்கியில் நகையை அடகு வைக்க வரும் வாடிக்கையாளர்களிடம் நன்றாக பேசி, பழகியுள்ளார். அதன் பின் அவர்களிடம் தனது நகைகளை கொடுத்து வாடிக்கையாளரின் பெயரில் அடகு வைத்து தரும்படி கேட்டுள்ளார்.

இதை நம்பிய வாடிக்கையாளர்களும் அவர் கொடுத்த நகையை அடகு வைத்து வங்கி ஆவணங்களில் கையெழுத்திட்டு உள்ளனர். அது போலி நகைகள் என்று தெரியாமலேயே வாடிக்கையாளர்கள் செய்துள்ளனர். அந்த நகைகளுக்கான தரம் பற்றிய உண்மை சான்றிதழ் போலவே ஜீவானந்தம் அளித்துள்ளார். அதோடு நகைகளை அடகு வைத்த நகை கடன் ரசீதை கால கெடுவுக்கு ஏற்றார் போல வெவ்வேறு வாடிக்கையாளர்களின் பெயரில் மாற்றி வைத்து மோசடி செய்துள்ளார்.

இந்நிலையில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகள் குறித்த தரம் மற்றும் மதிப்பை உறுதி செய்வதற்காக மதுரை மண்டல அதிகாரிகள் வங்கியில் அவ்வப்போது ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில்  ஜீவானந்தம் செய்த மோசடி தெரியவந்தது. இது குறித்து அந்த வங்கியின் கிளை மேலாளர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் போலி  நகைகளை அடகு வைத்து ஜீவானந்தம் 41 லட்சத்து 23 ஆயிரத்து 721 ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.