மராட்டிய மாநிலம் ஷிர்புர் தாலுகா பகுதியில் கிரண் மாங்களே(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற துணை ராணுவ அதிகாரி ஆவார். இவருக்கு திருப்தி(24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் புனே மாவட்டத்தை சேர்ந்த அவினாஷ் என்பவரை காதலித்து வந்த நிலையில் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் நீண்ட நாட்களாக தனது பெற்றோருடன் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்திருக்கிறார்.

இந்நிலையில் திருப்தி தனது கணவருடன் ஜல்காவ் மாவட்டத்தில் நடந்த உறவினரது திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். அந்த சமயத்தில் அவருடைய தந்தையும் அந்த திருமணத்திற்கு வந்திருந்தார். அப்போது திருப்தி கணவருடன் இருந்ததை கண்டு கோபமடைந்த கிரண் ஆத்திரத்தில் தனது மகளை கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்நிலையில் திருப்தியை காப்பாற்ற முயற்சி செய்த அவரது கணவரையும் சுட்டுக்கொன்றார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் ராணுவ அதிகாரி கிரணை சரமாரியாக தாக்கினர்.

இந்த தகவல் அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் உயிரிழந்த திருப்தி மற்றும் அவரது  கணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பொதுமக்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த கிரண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு காரணம், இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், திருப்தி ஒரு எம்பிபிஎஸ் பட்டதாரியாக இருந்தது, அவிநாஷ் வெறும் பன்னிரண்டாம் வகுப்பு கல்வி முடித்த தொழிலாளியாக இருந்தது என்பதனால்,  கிறன் மங்களே எதிர்ப்பு தெரிவித்தார் என போலீசார் விசாரணையில் தெரிவித்தனர். கிறன் மங்களே ஓய்வுபெற்ற அதிகாரியாக இருந்ததால், அவரது உரிமையுடைய துப்பாக்கியை கொண்டு இந்த தற்காலிக கோபத்தில் பயங்கரத் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.