ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த திகைப்பூட்டும் சம்பவத்தில், தங்க கடை உரிமையாளர் கிருஷ்ணா சாரி (55) மற்றும் அவரது மனைவி சரளா, மகன்கள் சந்தோஷ் மற்றும் புவனேஷ் ஆகியோர் தங்களது வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர்.

மதகசிரா பகுதியின் காந்தி பஜார் பகுதியில் தங்கக் கடை நடத்தி வந்த கிருஷ்ணா சாரி கடன் சுமையில் இருந்ததோடு, மகன்களின் படிப்பு செலவை நினைத்து பேரழுத்தத்தில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தங்க வேலைக்கு சயனாயிட் பயன்படுத்தப்படும் காரணத்தால், குடும்பத்தினர் சயனாயிட் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திலிருந்து சயனாயிட் பாட்டில் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவிலேயே உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணா சாரியின் சேதமடைந்த மொபைலை போலீசார் பறிமுதல் செய்து, தகவல்களை கண்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பண பிரச்சனையால் ஏற்பட்டதா அல்லது வேறு காரணங்களும் உள்ளனவா என்பதை உறுதி செய்ய விரிவான விசாரணை நடக்கிறது.