
லெபனான் மீது தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது இஸ்ரேல் ராணுவம். ஹமாஸ் அமைப்பின் தலைவர் சின்வார் கொல்லப்பட்டதை அடுத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வீட்டை குறி வைத்து ஆளில்லா விமானங்களை அனுப்பினர். இதன் எதிரொலியாக தற்போது ஹிஸ்புல்லா அமைப்பின் நிதி பதுக்கி வைத்த இடத்தை இஸ்ரேல் ராணுவம் கண்டறிந்துள்ளது. இந்நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு பணம் உதவி செய்யும் நிதி நிறுவனமான அல்குவார்த், அல்ஹசன் பொருளாதார அமைப்பை குறிவைத்து தாக்க உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இதனால் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருப்பவர்கள் வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. அல் குவார்த், அல் ஹசன் மூலமே ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஈரானிடம் இருந்து மக்களால் அளிக்கப்படும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலமே ஹிஸ்புல்லா அமைப்பு தனது ஆயுதப் படைகளை தயார் செய்கிறது. இந்த அமைப்புகளை தாக்கினால் பெரும் பொருளாதார சேதம் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஏற்படும். இதற்கிடையில் ஹிஸ்புல்லா அமைப்பின் உளவு பகுதியை இஸ்ரேல் ராணுவம் தாக்கியுள்ளது.
இதில் முக்கிய அதிகாரிகளான எல்ஹாக் அப்பாஸ் சலாமே, ராச்சா அப்பாஸ் இச்சா மற்றும் அகமது அலி ஹசின் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்தத் தொடர் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுத தொழிற்சாலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொதித்தழுந்த ஹிஸ்புல்லா அமைப்பு 100 ராக்கெட்களை இஸ்ரேலை நோக்கி அனுப்பியுள்ளது. இதனால் இஸ்ரேலின் வடக்கு பகுதி கொழுந்துவிட்டு எரிகிறது. இதனை அணைக்கும் முயற்சியில் இஸ்ரேலின் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.