
அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 15 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கோவை குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. அதாவது கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கே.சி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அழைத்திருந்தார்.
இந்த பேட்டி தொடர்பாக கோவை விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கே சி பழனிச்சாமி குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருந்தார். குறிப்பாக ரோட்டில் செல்பவர்கள் எல்லாம் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு ஆகிவிட முடியுமா?. அவர் கட்சியின் உறுப்பினரே கிடையாது என்று கூறியிருந்தார்.
இதையடுத்து கே.சி பழனிச்சாமி கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக கே சி பழனிச்சாமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 15ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கோவை குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.