ஒரு புதிய வேலைவாய்ப்பு மற்றும் திறமைகள் குறித்த அறிக்கையில், 83% பொறியியல் பட்டதாரிகளும் 46% வணிகப் பட்டதாரிகளும் இன்னும் வேலைவாய்ப்போ அல்லது இன்டர்ன்ஷிப் வாய்ப்போ பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், GenZ தலைமுறையைச் சேர்ந்த 51% இளைஞர்கள் கூடுதல் வருமானத்திற்காக ஃப்ரீலான்ஸ் மற்றும் ஆன்லைன் பிசினஸில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக B-School மாணவர்களிடம் இது 59% ஆக அதிகரித்துள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள Unstop நிறுவனம், 30,000 GenZ தொழிலாளர்கள் மற்றும் 700 மனிதவள (HR) நிபுணர்களிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் தகவல்களை வெளியிட்டுள்ளது. 73% நியமன அதிகாரிகள், இப்போது சிறந்த கல்வி நிறுவனங்களைவிட தனிநபரின் திறமைகளையே முன்னிலைப்படுத்துகிறார்கள்.

GenZ இளைஞர்களுக்கும் நியமன அதிகாரிகளுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. 77% இளைஞர்கள் மாதந்தோறும் அல்லது திட்ட அடிப்படையிலான செயல்திறன் மதிப்பீட்டினை விரும்புகிறார்கள். ஆனால் 71% நிறுவனங்கள் இன்னும் வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை மதிப்பீட்டையே பின்பற்றுகின்றன. மேலும், 70% இளைஞர்கள் கேஸ் ஸ்டடிகள், ஐடியாதான்கள், சிமுலேஷன்களில் பங்கேற்க தயாராக இருந்தாலும், வெறும் 25% நிறுவனங்களே இதை ஆட்சேர்ப்பு கருவியாக பயன்படுத்துகின்றன.

தொழில்நுட்ப நிறுவனங்களில் Google, Microsoft, Amazon ஆகியவை இன்ஜினியரிங் பட்டதாரிகளின் கனவுப் பணியிடங்களாக இருப்பதைத் தொடர்ந்து, Zomato, Meesho போன்ற புதிய நிறுவனங்களும் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.