உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டம் ஷாலிமார் கார்டன் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் ஷில்பி பாண்டே என்ற பெண் பல் அகற்று சிகிச்சைக்காக ஒரு பல் மருத்துவரிடம் சென்றுள்ளார். அந்த சிகிச்சையின் போது அவருக்கு 3 முறை அனஸ்தீசியா கொடுக்கப்பட்டது.

அதன்பின் சிகிச்சை முடிந்து  உணர்வு திரும்பியதும் கடும் வலி ஏற்பட்டதால்  பேச முடியாமல் வலியால் அவதிப்பட்டுள்ளார். மேலும் வாயை திறக்கும் போது, எச்சிலை துப்பும் போதும்  பற்கள் மட்டுமல்லாமல் வாயில் உள்ள நாக்கு , தொண்டை சதை பகுதிகள் கிழிந்து விழுந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் டெல்லியில் உள்ள வேறொரு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஷில்பி பாண்டே அந்த பல் மருத்துவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அந்த மருத்துவர் ரூபாய் 1500 பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என மிரட்டியதாக ஷில்பி பாண்டே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பல் மருத்துவர் உஜ்ஜுவல் கரவால் என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்து உள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மருத்துவர் மீது ஏற்கனவே பல புகார்கள் இருந்துள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.