
இந்திய அணியின் கேப்டனாக எம்.எஸ் தோனி இருந்தபோது ஆல் ரவுண்டராக யுவராஜ் சிங் இருந்தார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு கட்டத்தில் இந்திய அணியில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. இதற்கு தோனி தான் காரணம் என்று அவ்வப்போது செய்திகள் வெளியானது. அதோடு யுவராஜ் சிங் தந்தையும் மறைமுகமாக அடிக்கடி தோனியை விமர்சித்து வந்தார். அதன்பிறகு யுவராஜ் சிங் மற்றும் தோனி இடையையும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் தற்போது தோனியை மிகவும் விமர்சித்து பேசிய விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் தோனியை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன். அவர் முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். அவர் என்னுடைய மகனுக்கு எதிராக செயல்பட்டுள்ளார். எல்லா விஷயமும் தற்போது தான் வெளிவந்து கொண்டிருக்கிறது. நான் என் வாழ்க்கையில் எனக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். அதேபோன்று என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் யாராவது எனக்கு எதிராக செயல்பட்டாலும் அவர்களை அரவணைத்து செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.
தோனி என் மகனின் வாழ்க்கையை அழித்துவிட்டார். யுவராஜ் சிங் இன்னும் 4 அல்லது 5 வருடங்கள் விளையாடி இருப்பார். நீங்களும் முடிந்தால் யுவராஜ் சிங் போன்று ஒரு மகனை பெற்றெடுங்கள். இதற்கு முன்னதாக கம்பீர் மற்றும் கங்குலி கூட போன்றோர்கள் கூட யுவராஜ் சிங் போன்ற வீரரை இனி பார்க்க முடியாது என்று கூறியுள்ளனர். அவர் புற்று நோய்க்கு எதிராக போராடி மீண்டும் நாட்டுக்காக விளையாடி கோப்பையை வென்று கொடுத்ததற்காக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தோனியை அவர் மிகவும் கடுமையாக விமர்சித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.