பீகார் மாநிலம் நலந்தா மாவட்டத்தில் உள்ள சிங்க் காலனியில் ஏற்பட்ட சோகமான சம்பவம், அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிலாவ் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த பகுதியில், சந்திமாவ் கிராமத்தைச் சேர்ந்த மனீஷ் குமார் என்பவர், தனது காதலி பூனம் குமாரி மற்றும் அவருடைய தாய் புத்துஸ் தேவி மீது துப்பாக்கியால் சுட்டுத் தாக்கியுள்ளார்.

இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், மனீஷ் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். போலீசார் கூறுகையில், பூனத்தின் திருமணம் இந்த ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெற இருந்தது. இதனை தாங்க முடியாமல் மனீஷ் கடும் கோபத்தில் இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறார் என கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மனீஷ், பாவாபுரி மருத்துவக்கல்லூரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து சிலாவ் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர். இரு பெண்களின் உடல்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

உள்ளூர் குடியிருப்பாளர்களிடம் போலீசார் வாக்குமூலம் சேகரித்து வருகின்றனர். காதலியின் திருமணத்தை தடுக்கவே இந்த இரட்டை கொலையை இளைஞர் செய்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.