தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 20 முதல் 29ஆம் தேதி வரை துறை வாரியம் மானியம் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் 10 நாட்களாக நடைபெற்றது. பேரவையின் விதிப்படி ஒரு கூட்டம் முடிந்த பிறகு, 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடைபெற வேண்டும். அதன்படி சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் முன்னாள் உறுப்பினர்கள், பிரமுகர்களான கோதண்டம், சுப்புராயர், முகமது கனி, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, யெச்சூரி, முரசொலி செல்வம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மூன்றாவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி துணை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

அதோடு  4 அமைச்சர்கள் பொறுப்பேற்ற நிலையில், சட்டசபையில் அமைச்சர்கள் இருக்கை வரிசை மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருந்த போது, அவருக்கு 10வது இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அவர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 3வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். 3வது இடத்தில் இருந்த நகராட்சி நீர் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நெரு 4வது இடத்திற்கு சென்றுள்ளார். செந்தில் பாலாஜி, நாசர் ஆகியோர் ஏற்கனவே இருந்த இருக்கையில் இருக்கின்றனர். உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற கோவி.செழியனுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அருகே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஆர்.ராஜேந்திரனுக்கு முதலமைச்சருக்கு பின்னால் உள்ள இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.