குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஜெயேஷ்பாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரர் பாரத்பாயுடன் சேர்ந்து தங்குவதற்காக சூரத்துக்கு வந்துள்ளார். அப்போது இவர்கள் இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து வந்த 2 சிறுவர்கள் தவறான திசையில் ஸ்கூட்டரில் வந்துள்ளனர். இதனைப் பார்த்த பாரத்பாய் அவர்களை கண்டித்துள்ளார்.

இதற்கு அந்த சிறுவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெயேஷ்பாய், சிறுவர்களில் ஒருவரின் கன்னத்தில் அறைந்து, யூ-டர்ன் எடுத்து சரியான பாதையில் செல்லுமாறு கூறியுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றனர். இதையடுத்து அந்த சிறுவர்கள் அவர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

அப்போது சிறுவர்களில் ஒருவர், ஜெயேஷின் முதுகில் கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுவர்கள் இருவரையும் கைது செய்தனர்.