
பெங்களூருவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியால் பல கோடி ரூபாயை இழந்துள்ளார். அதாவது சாப்ட்வேர் இன்ஜினியர் மொபைல் எண்ணுக்கு முதலில் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி பேசுவதாக கூறி ஒருவர் பேசியுள்ளார். அப்போது அவர் உங்கள் சிம் கார்ட் மூலம் சட்டவிரோத விளம்பரங்களுக்கும், துன்புறுத்தும் செய்திகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மும்பை சைபர் கிரைம் காவல்துறையினர் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அதன் பின்னர் காவல்துறை அதிகாரி என்று கூறி மற்றொருவர் பேசியுள்ளார்.
அவர் பண மோசடிக்காக உங்கள் ஆதார் எண் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதோடு நீங்கள் ஆன்லைனில் நடக்க இருக்கும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், மீறினால் நேரடியாக வந்து கைது செய்வோம் என்றும் கூறியுள்ளார். இதனால் பயந்து போன அந்த இன்ஜினியர், ஸ்கைப் மூலம் விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார். அப்போது அந்த நபர் போலீஸ் உடை அணிந்து வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது அவர் ரிசர்வ் வங்கி கூறி இருப்பதாக என்று கூறி போலியான வழிகாட்டுதலை மேற்கோள் காட்டினார்.
மேலும் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை சரிபார்க்க வேண்டும் என்பதால், அவர் ஒரு வங்கி கணக்கை கொடுத்து அதற்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யும்படி கூறியுள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியரும் தனது வங்கியில் இருந்து 11.8 கோடி ரூபாய் அனுப்பி உள்ளார். இருப்பினும் அந்த நபர் மேலும் மிரட்டி உள்ளார். இதனால் சந்தேகமடைந்த சாப்ட்வேர் இன்ஜினியர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.