
இந்தியாவில் வேலை தொடர்பான செயல்களுக்கு தினமும் செலவழிக்கும் நேரம் குறித்து மத்திய புள்ளிவிபரத்துறை சமீபத்தில் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஒரு இந்தியர் தினசரி சராசரியாக 7 மணி 20 நிமிடங்கள் வேலை மற்றும் வேலை சார்ந்த செயல்களில் செலவழிக்கிறார் என தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையில் ஒவ்வொரு மாநில வாரியாக பார்த்தால், டெல்லி முதல் இடத்தில் உள்ளது. டெல்லியில் வேலைக்கு செல்பவர்கள் தினசரி 9 மணி நேரத்திற்கு அதிகமாக வேலையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஹரியானா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து இடம் பிடித்துள்ளன.
இந்த ஆய்வில் வேலை நேரம் மட்டுமல்லாமல் வேலை தேடுதல், போக்குவரத்து பயணம் போன்ற செயல்களும் அடங்கும். இதற்கு நேர் மாறாக நாகலாந்து மாநிலத்தில் மக்கள் தினசரி 5 மணி நேரம் மட்டுமே வேலைக்காக செலவிடுகின்றனர். இதற்கான முக்கிய காரணம் அந்த மாநிலத்தில் இயற்கை வேளாண்மை சார்ந்த வாழ்க்கை முறை, தொழில் துறை வேலை குறைவு மற்றும் சமூக கலாச்சார ஒழுங்குகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நகர்ப்புறங்களை ஒப்பிடுகையில், கிராமப்புறங்களில் வாழும் மக்கள் வேலை தொடர்பான செயல்களில் குறைந்த நேரத்தை செலவிடுகின்றனர். அதாவது நகர்ப்புற மக்கள் தினசரி 7 மணி நேரம் வேலை நேரமாக செலவிட்டால், கிராமப்புற மக்கள் தினசரி 5 மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக செலவிடுகின்றனர்.
இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பாக கருதப்படுவது, ஆண்கள் தினமும் 7 மணி நேரம் வேலைக்காக செலவழிக்கிறார்கள். ஆனால் பெண்கள் தினசரி 5 மணி நேரங்கள் மட்டுமே வேலைக்காக செலவழிப்பதாகவும் தெரியவந்துள்ளது. இது இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் பாலின சீரற்ற தன்மையை தெளிவாக காட்டுகிறது.