
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிலிருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த புட்ச் வில்மோரும் கோயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். அங்கு 8 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சிகள் முடிந்த பின் பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்கியிருந்தனர்.
அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டது. அதனால் அவர்கள் பூமிக்கு திரும்பாமல் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலேயே கடந்த 9 மாதங்கள் தங்கி இருந்தனர். இதன் பின் அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் க்ரு டிராகன் விண்கலம் மூலம் கடந்த மார்ச் 18 2025 ஆம் ஆண்டு பூமிக்கு திரும்பினர். இதனைத் தொடர்ந்து பூமிக்கு திரும்பிய அவர்களுக்கு கடந்த 10 நாட்களாக சிகிச்சை நடைபெற்று வந்ததால் ஓய்வில் இருந்தனர்.
இந்நிலையில் விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசி உள்ளனர். அதில் விண்வெளியில் இருந்து இந்தியா பார்ப்பதற்கு எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு சுனிதா வில்லியம்ஸ் பதிலளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,”இந்தியா விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இமயமலைக்கு மேல் நாங்கள் வரும்போது எல்லாம் புட்ச் வில்மோர் அருமையான புகைப்படங்களை எடுத்துள்ளார். கிழக்கிலிருந்து மும்பை, குஜராத் ஆகிய பகுதிகளின் மேற்பரப்புகளில் செல்லும்போது அழகிய கடற்கரைகளை பார்த்தோம். இரவு நேரங்களில் இந்தியாவின் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை அனைத்தும் ஒளிந்தபடியே இருக்கும்.”என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும் ஆக்ஸீயம் திட்டத்தின் மூலம் இந்திய சுபன்சு சுக்லா விண்வெளிக்கு செல்ல இருப்பது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். அவரும் விண்வெளிக்கு சென்று திரும்பி இந்தியா எப்படி இருந்தது என்பதை உங்களுக்கு தெரிவிப்பார். இந்தியர்களுடன் எனது விண்வெளி அனுபவங்களை பகிர விரும்புகிறேன், நிச்சயம் அது ஒரு நாள் நடக்கும். விண்வெளியில் கால் பதிக்கும் முயற்சியில் இந்தியாவிற்கு நான் நிச்சயமாக உதவுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.