
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே கதிர் நரசிங்கபுரத்தில் வசித்து வருபவர் பரமேஸ்வரன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கௌசல்யா (24) என்ற மகள் இருந்துள்ளார். கௌசல்யா ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கௌசல்யாவுக்கு கம்பம் புதுப்பட்டியில் வசித்து வரும் பாலாஜி (28) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். பாலாஜி பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் நேற்று முன்தினம் காலை மாப்பிள்ளை வீட்டில் திருமணம் நடைபெற்றது.
மாலையில் மறு வீடு செல்வதற்காக கௌசல்யாவின் வீட்டிற்கு தம்பதியர் சென்றுள்ளனர். கதிர் நரசிங்கபுரத்தில் உள்ள கௌசல்யா வீட்டிற்கு மறு வீடு சென்றதும் மறு வீட்டுக்கான சடங்குகள் எல்லாம் நடைபெற்றது. அதன் பின்னர் முகம் கழுவி விட்டு வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு தனது அறைக்கு கௌசல்யா சென்றுள்ளார். ஆனால் உள்ளே சென்ற கௌசல்யா நெடு நேரமாகியும் வெளியே வராததால் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து கௌசல்யாவின் அறை கதவை தட்டி உள்ளனர். ஆனால் கௌசல்யா கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் படுக்கையறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர்.
அறையிலுள்ளே கௌசல்யா தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து ராஜதானி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காவல்துறையினர் விரைந்து வந்து கௌசல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்வதற்கான காரணம் குறித்து குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரியகுளம் சப் கலெக்டர் ரஜட் பீடன் என்பவரின் தலைமையில் கௌசல்யா தற்கொலை குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. திருமண நாளன்று இளம்பெண் தூக்கில் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.