
சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகரில் இருக்கும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் டாக்டர் புவனேஸ்வரி என்பவர் மருத்துவ கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் கொடுக்கும் வகையில் புவனேஸ்வரி அறிமுக வகுப்பு நடத்தி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவருக்கு தேவையான அவசர மருத்து உதவிகளை செய்து டாக்டர்கள் குழுவினர் புவனேஸ்வரிக்கு சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனையடுத்து வடபழனியில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் புவனேஸ்வரி அனுமதிக்கப்பட்டார். அவரது மூளையில் கடுமையான ரத்தக்கசிவு இருந்தது. பின்னர் புவனேஸ்வரி மூளைச்சாவு அடைந்தார். தனது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க வேண்டும் என்பதே புவனேஸ்வரியின் விருப்பம். அவரது விருப்பப்படி புவனேஸ்வரியின் இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. தானமாக கொடுத்த உடல் உறுப்புகளின் மூலமாக புவனேஸ்வரி இந்த பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என அவருடன் வேலை பார்த்த டாக்டர்கள் உட்பட பலர் தெரிவித்துள்ளனர்.