தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில் எச். ராஜா தலைமையில் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு மாநில பாஜகவை கவனித்துக் கொள்ள தேசிய தலைமை ‌ நியமனம் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று சென்னை விமான நிலையத்தில் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அனைவரும் எதிர்பார்ப்பது போன்று இந்த ஒருங்கிணைப்பு குழு பாஜகவில் உள்ள அனைவரையும் அரவணைத்து செல்லும் என்றார். அதன் பிறகு நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் விஜயை ஒருபோதும் விமர்சித்தது கிடையாது. அவரை விமர்சித்ததாக வரும் தகவல்கள் 100% பொய்.

நான் விஜயின் மெர்சல் படத்தில் வந்த கருத்தைதான் விமர்சித்தேன். அதாவது அனைவருக்கும் 100 சதவீதம் இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவம் என்று கூறினார். சிங்கப்பூரில் நினைத்த உடன் மருத்துவமனையில் அனுமதி ஆக முடியாது. முன்பதிவு செய்த பிறகுதான் அனுமதி ஆக முடியும். இங்கு கல்வி மற்றும் மருத்துவம் என இரண்டுமே இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் மெர்சல் படத்தில் கல்வி மற்றும் ‌ மருத்துவம் என இரண்டும் இலவசமாக வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது. நான் அதை மட்டும் தான் விமர்சித்தேன். விஜய் கட்சி ஆரம்பித்த உடன் அரசியலுக்கு வாருங்கள் என்று கூறி அவரை நான் வரவேற்றேன். மக்கள் பணியாற்றுவதற்கு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் உரிமை உள்ளது. மேலும் விஜய் கட்சி ஆரம்பித்த அன்றே அவரை நான் வரவேற்று விட்டேன் என்று கூறினார்.