மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்வதன் தொடர்ச்சியாக, ஓடிசா மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த 55 வயதான சரதா பாய் உட்பட பலருக்கு நாட்டை விட்டு வெளியேற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

1970ஆம் ஆண்டு பாகிஸ்தானின் சிந்து மாகாணம் சுக்கூர் நகரில் பிறந்த சரதா பாய் தற்போது ஒடிசாவின் போலாங்கிர் மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார். சரதா பாய் கூறுகையில், 1987ஆம் ஆண்டு தனது தந்தையுடன் 60 நாட்கள் விசாவில் இந்தியாவுக்கு வந்ததாகவும், பின்னர் ஒடிசாவின் கோராபட் மாவட்டத்தில் தங்கியதாகவும் தெரிவித்தார்.

35 ஆண்டுகளுக்கு முன்னர் போலாங்கிரில் உள்ள ஒரு இந்திய தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் மற்றும் இரு பேரப்பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்திய குடிமக்கள்.

போலாங்கிர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சனிக்கிழமை வழங்கிய கடிதத்தில், “உங்களிடம் நீண்டகால விசா இல்லை என்று தற்போது உள்ள தரவுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக நாட்டைவிட்டுச் செல்ல வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டது.

சரதா பாய், தன்னிடம் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை இருப்பதாகவும், இந்திய குடியுரிமைக்காக நீண்ட காலமாக விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் இதுவரை குடியுரிமை வழங்கப்படவில்லை எனவும் கூறினார். “நான் வந்த நாளிலிருந்து இந்தியாவையே என் நாடாகக் கருதுகிறேன். என் குடும்பம் இங்கே இருக்கிறது.

எனக்கு பாகிஸ்தானில் யாரும் இல்லை. ஒருபோதும் பாகிஸ்தானில் யாரிடமும் பேசியதில்லை. என்னை என் குடும்பத்திலிருந்து பிரிக்காதீர்கள்,” என்று ஊடகங்களுக்கு கூறினார். ஒடிசா மாநில அரசு, பல்வேறு மாவட்டங்களில் நீண்ட காலமாக வசித்து வந்த 12 பாகிஸ்தான் குடிமக்களுக்கு வெளியேற உத்தரவு வழங்கியுள்ளது.

இவர்களில் சிலர் நீண்டகால விசாவுடன் தங்கியிருந்தாலும், சிலர் ஆவணங்களின்றி தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. “இந்திய அரசின் உத்தரவின்படி, நாம் நோட்டீஸ் வழங்கி வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று மாநிலம் முழுவதும் பொறுப்புள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

புவனேஸ்வர் நகரத்தில் ஒருவருக்கும், கட்டக் மாவட்டத்தில் மூன்று பேருக்கும், பாலசோர் மாவட்டத்தில் ஒருவருக்கும் இவ்வாறு வெளியேறும் நோட்டீசுகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.