
தெலுங்கானாவைச் சேர்ந்த ரப்பா சாய் பிரசாந்த் என்ற மென்பொருள் இளைஞர், வேறொருவரை தன்னைப் போல மாற்றி, அவரது மூலம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை பெற்ற விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘டிராகன்’ தமிழ் திரைப்படத்தின் கதையை ஒத்த இந்த சம்பவம், தகவல் தொழில்நுட்ப துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரசாந்த், சம்ப்ரதா சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் என்ற ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் வழியாக விண்ணப்பித்து, ஜனவரி 20, 2025 அன்று நியமன ஆணை பெற்றுள்ளார். இந்நிலையில், அவர் பணி செய்யும் விதமும், பேசும் நடைமுறையும், நேர்முகத் தேர்வில் பங்கேற்ற நபரின் ஆளுமையும் முழுமையாக வேறுபட்டதாக இருப்பதைப் பார்த்த HR பிரிவினர் சந்தேகமடைந்தனர்.
உடனடியாகப் பொதுவான விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, நேர்காணலின் போது எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட் மற்றும் பிரசாந்தின் தற்போதைய புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்ததில், நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர் வேறு ஒருவர் என்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து பிரசாந்த் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், அவர் தற்போது ஹைதராபாத் திரும்பியுள்ளார். அதற்குப் பிறகு, அவர் 15 நாட்கள் பணியாற்றியதாகக் கூறி சம்பளத்தை கேட்பது நிறுவனத்தினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம், நிறுவனங்களில் நேர்முகத் தேர்வுகளுக்கான பாதுகாப்பு முறைகள் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்த மோசடிக்கான சட்ட நடவடிக்கையாக, பிரசாந்த் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இத்தகைய மோசடிகள் தகவல் தொழில்நுட்ப துறையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இந்நிகழ்வு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதொரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.