முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை மிகப் பிரமாண்டமாக கொண்டாடுவதற்காக திமுகவினார் ஏற்பாடு செய்து வைத்துள்ளனர். இந்த நாளில் முதல்வரோடு செல்பி எடுக்கவும், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவும் திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு பல ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் இந்த நாளில் பிறந்த நாள் கொண்டாடும் முதல்வர் தன்னுடைய பிறந்தநாளுக்கு மாலைகள், பூச்செண்டுகளை அனுப்புவதை காட்டிலும் எளிமையானவர்கள் பயன்படும் நோக்கத்தில் நல்ல திட்டங்களை செய்தால் மகிழ்வேன் என்று உடன்பிறப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற இந்த 21 மாதங்களில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் கட்டணம் குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, குழந்தைகளுக்கு தொலைநோக்கு கல்வி திட்டங்கள், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வித் திட்டம் உள்ளிட்ட செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை எல்லாம் நினைவு கூறும் விதமாக திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவானது இரண்டு புதுமையான ஏற்பாடுகளை செய்துள்ளது.

அதன்படி கட்சி தொண்டர்கள் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் முதல்வரின் நலம் விரும்பிகள் அனைவரும் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். அதேபோல செல்பி வித் CM என்னும் புதிய திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் தற்போது முதல்வரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக சென்னையில் தொடங்கியது. சென்னையில் திராவிட நாயகன் என்னும் பெயரில் பறக்கும் ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளது. சென்னையில் தேனாம்பேட்டை, வேப்பேரி, அமைந்தகரை, அண்ணா நகர் ஆகிய நான்கு பகுதிகளில் பலூன்கள் அமைக்கப்பட்டுள்ளது.