
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் பெத் தாலுகாவிலுள்ள போரிச்சிவாரி கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதால், அப்பகுதி பெண்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து 70 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி, வெறும் சிறிய அளவு அழுக்கு நீரைத் திரட்ட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாக பரவியுள்ளது. வீடியோவில், சில பெண்கள் கிணற்றை சுற்றி பாத்திரங்களுடன் காத்திருக்க, ஒருவர் கயிறு உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுப்பது காணப்படுகிறது.
இதன்மூலம் அடிப்படை வசதியான தண்ணீருக்காக மக்கள் இன்னும் போராட வேண்டிய துயரமான உண்மையை வெளிப்படுத்துகிறது. தேர்தல் பரப்புரைகளில் பல வாக்குறுதிகள் கொடுக்கப்படுகிற நிலையில், மக்கள் ஒரு சொட்டு குடிநீருக்காகவே தவிக்கின்றனர்.
#WATCH महाराष्ट्र: नासिक जिले के तालुका पेठ के बोरीचिवारी गांव में जल संकट गहरा गया है। कुएं सूख गए हैं। pic.twitter.com/ASdR4itg3g
— ANI_HindiNews (@AHindinews) April 20, 2025
நாசிக் மாவட்டத்தில் ஏராளமான கிராமங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் தாக்கமடைந்துள்ளன. இந்தப் பகுதியில் உள்ள பல கிணறுகள் வறண்டுவிட்ட நிலையில், குடிநீருக்காக மக்கள் பல கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டிய நிலை உள்ளது.
தண்ணீர் நெருக்கடியை சமாளிக்க, 2025ம் ஆண்டு பிப்ரவரியில் நாசிக் மாவட்ட நிர்வாகம் ₹8.8 கோடி மதிப்பில் குடிநீர் விநியோகத் திட்டத்தை அங்கீகரித்தது. இதன் கீழ், கோடை காலங்களில் தேவைப்படும் கிராமங்களுக்கு டேங்கர் மூலம் தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் கணக்கெடுப்பின் அடிப்படையில், 2025ம் ஆண்டு நாசிக் மாவட்டத்தில் உள்ள 776 கிராமங்களில் புதிய கிணறு தோண்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் ஏற்கனவே உள்ள வறண்ட கிணறுகளையே நம்பி உயிரை பணயம் வைத்து தண்ணீரைத் தேடி அலைக்கின்றனர்.