
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் திபெத் ஆகிய 3 நாடுகளில் இன்று காலை நேரத்தில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பாகிஸ்தானில் இன்று அதிகாலை 2:58 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 4.3 பதிவானது. இந்த தகவலை தேசிய நில அதிர்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு 32.01 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 69.71 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இன்று காலை 4.53 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 193 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. அதோடு அந்த நிலநடுக்கம் 36.27 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.97 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மூன்றாவதாக இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் அமைந்துள்ள திபெத் பகுதியில் 5.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு 28.35 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 87.20° கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அடுத்தடுத்து 3 நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் இன்னும் வெளிவரவில்லை என கூறப்படுகிறது.