தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகனுக்கு சொந்தமான வேலூரில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவருடைய மகன் எம்பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் இரண்டு நாட்களாக சோதனை நடைபெற்ற நிலையில் நேற்று காலை தான் நிறைவடைந்தது. இதற்கிடையில் திடீரென அமைச்சர் துரைமுருகன் நேற்று முன்தினம் இரவு டெல்லிக்கு அவசரமாக பயணம் மேற்கொண்டார். ஒருபுறம் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென துரைமுருகன் டெல்லிக்கு சென்றது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு வியூகங்களுக்கு வழிவகுத்தது.

இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் தற்போது டெல்லியில் இருந்து திரும்பிய நிலையில் அவரிடம் செய்தியாளர்கள் டெல்லி பயணம் குறித்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது, நான் டெல்லிக்கு சென்றதற்கும் அமலாக்கத்துறை சோதனைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சோதனைகள் நடைபெறுவது என்பது வழக்கமான ஒன்றுதான். இது புதிது கிடையாது. நான் துறை ரீதியான ஒரு வேலைக்காக தான் டெல்லிக்கு சென்றேன் என்று கூறினார். மேலும் முன்னதாக பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையின் போது 2.5 கோடி கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.