வருகிற 2024 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க தற்போது தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகளும், சலுகைகளும் வெளியிடப்பட்டது. மேலும் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் தேர்தலை கவனத்தில் கொண்டு தான் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என எதிர்க் கட்சி சார்பாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் பா.ஜ.க-வில் முன்னாள் எம்.பி ஆன சுப்பிரமணியன் சுவாமி வரவிருக்கின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறுவதற்கான ரகசியங்களை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியா, சீனா இடையேயான பதற்றம் நிறைந்த எல்லைப் பகுதியில் படைகள் குவிக்கப்பட்ட சூழலை குறிப்பிட்டு தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையே ஒரு நீண்ட கால பரஸ்பர ஒப்பந்தம் போடப்பட்ட நிலையிலும் சீனா அதனை மதிக்காமல் நடந்து கொண்டு ஒப்பந்த விதிமீறலில் ஈடுபட்டுள்ளது. இந்தியா இதனை பலமுறை கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியது.

இருப்பினும் எல்லையில் படைகளை வாபஸ் பெரும் நடவடிக்கைகள் ராணுவ தளபதிகள் மட்டத்திலான  பேச்சுவார்த்தை வழியே  தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பா.ஜ.க முன்னாள் எம்.பி சுப்ரமணியன் சுவாமி சீனாவை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து சுட்டிக்காட்டி உள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே அசல் எல்லைக்கோட்ட பகுதியில் 1996 ஆம் ஆண்டில் பரஸ்பர ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும் கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலப்பகுதியில் இருந்து சீன படைகளை வாபஸ் பெரும் வரை, சீனாவுக்கு எதிராக குவாட் அமைப்பை ஒரு ராணுவ கூட்டணியாக மாற்ற இந்தியா பணியாற்ற வேண்டும்.

மேலும் சீனாவை எதிர்கொள்வதற்கான இதுவரை வெளியிடப்படாத ரகசிய தகவல்கள் ஏதேனும் பிரதமர் மோடி வைத்திருந்தால் அவர் தானாக முன்வந்து அவற்றை வெளியிட வேண்டும். அப்படி செய்யும்போது வருகிற 2024 ஆம் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க நிச்சியமாக வெற்றிபெறும் எனக் கூறியுள்ளார்.