கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலையில் அதிகாலை 5 மணிக்கு தனியார் நிறுவனத்தின் கார் ஐடி நிறுவன ஊழியர்களை இறக்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விளாங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது பயங்கரமாக மோதியது.

இதனால் மின்கம்பம் 2 துண்டாக முறிந்து கார் மீது விழுந்தது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து நடந்த நேரம் அதிகாலை என்பதால் பெரும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் தான் விபத்து நடந்தது தெரியவந்தது.