
அமெரிக்காவின் அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து அதிரடியாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் வெளிப்பாடாக அமெரிக்க அரசு தனது நிர்வாகத்தின் செலவு குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் DOGE துறையின் தலைமை ஆலோசகராக உலகின் மிகப்பெரிய பணக்காரரான டெஸ்லா நிறுவனத்தின் இயக்குனர் எலான் மஸ்க்கை நியமித்தார்.
இதனை அடுத்து எலான் மஸ்கின் ஆலோசனையின் பேரில் ஆட்குறைப்பு நடவடிக்கை, நிதி திட்டங்கள் ரத்து என பல அறிக்கைகளை ட்ரம்ப் வெளியிட்டார். இதற்காக அமெரிக்காவில் அதிபர் ட்ரம்புக்கும், எலான் மஸ்க்கும் எதிராக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் எலான் மஸ்க் அரசு பணிக்காக ஒதுக்கப்படும் நேரத்தை குறைத்துக் கொண்டு தனது டெஸ்லா கார் நிறுவனப் பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார். எலான் மஸ்கின் இந்த முடிவிற்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்தப் பதிவில், எலான் மஸ்க்கை சிலர் மோசமாக நடத்துகின்றனர். ஆனால் அவர் மிகச்சிறந்த தேசபற்றாளர். அவரை தன்னுடன் நீண்ட காலம் வைத்துக் கொள்வதே தனது விருப்பம் என தெரிவித்துள்ளார்.