மும்பையில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் மக்கள் அனுப்பப்பட்ட மோசடி வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மோசடி கும்பல் ஒன்று போலியான பாஸ்போர்ட் தயாரித்து மக்களை அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைத்து பணம் சம்பாதித்து வந்துள்ளனர். அந்த வகையில் இதுவரை 80 பேரை துன்கி வழியாக அனுப்பியுள்ளனர். இந்த மோசடியின் முக்கிய குற்றவாளியாக அஜித் புரி என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் உதவியாக இருந்த ரோஷன் துத்வாட்கர், சஞ்சய் சாவான், சுதீர் சாவாந்த், ஆர்.பி.சிங் மற்றும் ராஜு சாச் இம்தியாஸ் ஆகியோர் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலியான பயண ஆவணங்கள் தயாரிக்கும் முறை தெரிய வந்தது. அதில் மிகவும் நுட்பமாக திட்டமிட்டு இந்த வேலையை செய்துள்ளனர். நிஜமான பாஸ்போர்ட் வைத்திருப்பவரிடம் ரூ. 5 லட்சம் கொடுத்து பாஸ்போர்ட்டை வாங்கி அதில் உள்ள புகைப்படத்தை மாற்றி பயணிக்கும் நபரின் புகைப்படத்தை வைத்துவிட்டு போலி விசா மற்றும் போர்டிங் பாஸ் சேர்த்து பயணத்திற்கு தயாராக்கி அனுப்பியுள்ளனர்.

இந்த கும்பல் திட்டமிட்டு “முண்டி கட்” பாஸ்போர்ட் என்னும் முறையில் ஒருவரின் முகம் மாற்றிய பாஸ்போர்ட் மூலம் மக்களை அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர் என காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்தது. இந்த மோசடி திட்டத்தில் துத்வாத்கர் என்ற நபர் ஒவ்வொரு மாதமும் தாய்லாந்துக்கு பயணித்ததை காவல்துறையினர் கவனித்த நிலையில் இந்த மோசடி வெளியானது. மேலும் இந்த மோசடியில் ஈடுபட்ட 4 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.