ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற என்கவுண்ட்டரில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தளபதி அல்தாஃப் லல்லி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் இயக்கங்களை கண்காணிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த என்கவுண்ட்டர் நடத்தப்பட்டது.

இதேநேரம், தாக்குதலுக்குத் தொடர்புடைய அதில் தோக்கர் மற்றும் ஆசிஃப் ஷேக் ஆகியோரின் வீடுகள் அனந்த்நாக் மற்றும் அவந்திபோரா பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் இடிக்கப்பட்டன. பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பை மீறி இஸ்லாமிய வசனங்களை ஓதச் சொல்லி, மத அடிப்படையில் தனிநபர்களை குறிவைத்து வெறித்தனமாக சுட்டுக் கொன்றுள்ளனர் என்று தப்பித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் நாடு முழுவதும் கொந்தளிப்புடன், இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறைவு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.