மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன சட்டம் சம்மந்தப்பட்ட முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 15 வருடங்களுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களுக்கும் ஸ்கிராப்பைஜ் கொள்கையை நடைமுறைபடுத்த மத்திய அரசானது முடிவெடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. பழைய வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையால் சுற்றுசூழல் மாசடைகிறது. இதனை குறைக்கும் நோக்கத்தில் தான் போக்குவரத்து அமைச்சகம் இம்முடிவை எடுத்துள்ளது.

இந்த முடிவால் 15 வருடங்களுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களின் பதிவும் ரத்துசெய்யப்படுகிறது. மத்திய அரசின் இந்த புது உத்தரவு நடப்பு ஆண்டின் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறை வருகிறது. மையம், மாநிலம், யூனியன் பிரதேசம், முனிசிபல் கார்ப்பரேஷன், மாநில போக்குவரத்து மற்றும் அரசு தன்னாட்சி நிறுவனங்களிலும் 15 வருடங்கள் பழமை வாய்ந்த அனைத்து வாகனங்களும் ரத்து செய்யப்படவுள்ளது. எனினும் இப்பட்டியலில் 15 ஆண்டுகள் பழமையான ராணுவ வாகனங்கள் மட்டும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றில் ரிஜிஸ்டர் பதிவு புதுப்பிக்கப்பட்ட வாகனங்களும் ரத்துசெய்யப்பட்டதாகக் கருதப்படும். இது போன்ற பழைய வாகனங்கள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்ட ஸ்கிராப் மையத்தில் அப்புறப்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் மத்திய-மாநில அரசுகளின் 15 வருடங்கள் பழமையான அனைத்து வாகனங்களையும் ரத்துசெய்ய வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வரைவு ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது