
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத் தேர்தல் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் அறிவித்தார். மேலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடப்பதற்கான நடைமுறைகள் நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் ஜனவரி மாதம் 10ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த வேட்பு மனு தாக்கல் குறித்து மாவட்ட ஆட்சியர், தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா தெரிவித்ததாவது, இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி மாதம் 10ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் 17ஆம் தேதி முடிவடைகிறது. அரசு விடுமுறை தினங்களை தகர்த்து ஜனவரி மாதம் 10, 13, 17 ஆகிய மூன்று தேதிகளில் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படும்.
தேர்தல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளான 3 பறக்கும் படை, 3 நிலை குழு, 3 வீடியோ கண்காணிப்பு குழு உள்பட 5 குழுக்கள் அமைக்கப்படும். 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படும். சோதனைக் குழுக்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுவர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விளம்பரங்கள் செய்வதற்கு முன்பு தணிக்கை குழுவிடம் சான்று பெற்று விளம்பரம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் கூறியுள்ளார்.