விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீமான், கருணாநிதியை ‘சண்டாளன்’ எனக் குறிப்பிட்டதாக கூறப்பட்டதால், அவரின் இந்த அறிக்கைக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் அடிப்படையில் பலர் சீமான் மீது புகார் கொடுத்துள்ளனர்.

ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பட்டாபிராம் காவல் நிலையத்தில், ராஜேஷ் என்பவர் சீமான் மீது அவதூறான வார்த்தை பயன்படுத்தியதற்காக புகார் அளித்தார். ஆனால், அப்புகாரின் அடிப்படையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ராஜேஷ் எஸ்சி, எஸ்டி ஆணையத்திடம் முறையிட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, ‘சண்டாளன்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய ஆவடி காவல் ஆணையத்திற்கு எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதே நேரத்தில், இதே வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் முன்பு கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனிடையே, சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்த வழக்கின் மீதான சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக உள்ளனர் என தெரிகிறது.