
மும்பையை அடுத்த தொம்பிவிலியில், “எக்ஸ்க்யூஸ் மீ” என ஆங்கிலத்தில் சொன்னதற்காக இரண்டு பெண்கள் தாக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பழைய தொம்பிவிலி மேற்கு பகுதியில் உள்ள கணேஷ் ஷ்ரத்தா கட்டடத்தில் திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இந்நிலையில் பூனம் குப்தா மற்றும் கீதா சவுகான் என்ற இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, Anil Pawar மற்றும் அவரது மனைவி மாடி நுழைவாயிலில் நடுவே நின்றிருந்தனர். அவர்களை நகரச் சொல்வதற்காக “excuse me” என கூறியதிலிருந்து வாக்குவாதம் தொடங்கி, அவர்கள் இருவரையும் தாக்கும் அளவுக்கு தீவிரமானது.
இந்த வாக்குவாதத்தின் போது, மராட்டியில் பேசவில்லை என்ற காரணத்தால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. பின்னர், குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்களான பாபாசாகேப் தவளே மற்றும் அவரது மகன் ரிதேஷ் ஆகியோரும் அந்த இடத்திற்கு வந்து, பெண்களை தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
சமீபமாக மஹாராஷ்டிராவில் மராட்டி மொழியின் முக்கியத்துவம் குறித்த விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண சேனா (MNS), வங்கிகளில் மராட்டியில் சேவை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களை நடத்தியது. இதனால் வங்கி ஊழியர்கள் சங்கம் முதலமைச்சரிடம் புகார் அளித்தது. ராஜ் தாக்கரே பின்னர் தனது தொண்டர்களிடம் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தும்படி அறிவுறுத்தினார்.
“மராட்டி மொழி கேள்விக்குள்ளாகும் போது, என் தொண்டர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்,” என ராஜ் தாக்கரே கூறியுள்ளார். “RBI விதிகளின்படி பிராந்திய மொழிகளில் வங்கி சேவைகள் வழங்க வேண்டும். ஆனால் அதைப் பராமரிக்க அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்,” எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு போராட்டங்களை இடைநிறுத்துங்கள் எனத் தெரிவித்த அவர், “மராட்டி மக்களே தங்கள் உரிமையை கேட்க தயாராக இல்லை என்றால், நாங்கள் எப்போதும் போராட முடியாது. ஆனால் மராட்டி மொழி மீண்டும் அவமதிக்கப்பட்டால், நாங்கள் திரும்புவோம்!” என எச்சரித்துள்ளார். மேலும் மராட்டிய மொழி மற்றும் ஹிந்தி மொழி சர்ச்சையால் 8 மாத கை குழந்தையுடன் சென்ற பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.