
சென்னை எழும்பூரில் ஆல்பர்ட் திரையரங்கம் அமைந்துள்ளது. இங்கு நித்யா என்பவர் தனது உறவினர்கள் மற்றும் குழந்தைகளுடன் நேற்று படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தியேட்டரின் கேண்டினில் இருந்து அவர் குளிர்பானம் வாங்கினார். ஆனால் அதிலிருந்து ஏதோ ஒரு வாசனை வந்ததால் அதனை பார்த்தார். அப்போது அந்த குளிர் பானம் காலாவதியாகி இருந்தது தெரிய வந்தது. உடனடியாக தியேட்டர் நிர்வாகத்தினருடன் அது பற்றி கேட்டு நித்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது திரையரங்கத்தின் கேண்டீன் நிர்வாகம் தாங்கள் தவறான பொருள்களை விற்பனை செய்திருந்தால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலமாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுங்கள் என்று கூறினர். இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை திரையரங்கில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அனுமதி இல்லாமல் கூல்டிரிங்ஸ் மற்றும் உணவு பொருட்களை சேர்த்து வைத்திருக்கும் கிடங்கில் காலாவதியான பொருட்கள் இருப்பதாகவும், மற்றும் தேதி குறிப்பிடப்படாத உணவுப் பொருட்கள் இருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்தார். அத்துடன் அந்தப் பெண் கூறிய குளிர்பான பாட்டில்கள் உணவு கிடங்கு பகுதியிலிருந்து பறிமுதல் செய்ததாக செய்தியாளர்களிடம் கூறினார். அதன்பின் இந்த தியேட்டரின் கேண்டின் நடத்தும் நிர்வாகத்திற்கு ஒரு வருட காலம் லைசன்ஸ் சஸ்பெண்ட் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தார்.