பெங்களூரில் இளைஞர் ஒருவர் 9 வருடத்தில் 15 பெண்களை மேட்ரிமோனி மூலம் ஏமாற்றி திருமணம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் என்றாலே ஒன்று பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம். மற்றொன்று அவர்களாகவே விரும்பி செய்து கொள்ளக்கூடிய காதல் திருமணம் ஆகியவை தான். இவை இரண்டிலுமே தற்போது மோசமான வாழ்க்கை என்பது பலருக்கும் அமைந்து வருகிறது. காரணம்,

காதலித்து திருமணம் செய்யக் கூடியவர்கள் சரியான துணையைத் தேர்ந்தெடுக்காமல் அவதிப்படுவதும், வீட்டில் நிச்சயிக்கப்படும் திருமணம் சரியாக விசாரிக்கப்படாமல் மேட்ரிமோனி உள்ளிட்ட ஆன்லைன் வலைதளங்களை நம்பி தங்கள் வீட்டுப் பிள்ளைகளை கொடுத்து  இன்னல் படுவதுமான சம்பவங்கள் பல தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றன. அந்த வகையில்,

பெங்களூரில் வசித்து வரும் மகேஷ் என்ற நபர் தன்னை  டாக்டர் என அறிமுகப்படுத்திக் கொண்டு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக மேட்ரிமோனியில் தொடர்ந்து புதுப்புது ஐடிகளை உருவாக்கி 15 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதில் உள்ள அனைவரும் மிகுந்த செல்வந்தர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்தவர்களிடம் பணம், நகை என ஏராளமானவற்றை நூதன முறையில்  மோசடி செய்துள்ளார். இந்நிலையில் இறுதியாக திருமணம் செய்த பெண்ணிடம் கிளினிக் மேம்படுத்த வேண்டும் எனக் கூறி பணம் கேட்டு வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட பெண் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கவே,

விவரம் அறிந்த மகேஷ் தனது கடைசி மனைவியின் நகை பணம் உள்ளிட்டவற்றை சுருட்டி கொண்டு தப்பி ஓடி தலைமறைவாகினார். பின் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர தேடுதலுக்கு பின், அவரை கைது செய்து விசாரிக்கையில், இவரைப் போன்று 15 க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. தற்போது இத்தகவல்கள் வெளியிடப்படவே,  ஒவ்வொரு பெண்ணாக அவர் மீது தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.