
பள்ளியில் பொதுத்தேர்வு எழுதயிருக்கும் மாணவ, மாணவிகளிடம் வருடந்தோறும் பிரதமர் மோடி கலைந்துரையாடி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் அவர் கடந்த 10-ம் தேதி அன்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதேநேரம் இந்த நிகழ்ச்சியில் சில மாற்றங்களும் செய்யப்பட்டது. அதாவது பிரதமர் மோடி மட்டுமே மாணவர்களுடன் கலந்துரையாடி வந்த நிலையில், இந்த முறை பல்வேறு துறையைச் சார்ந்த பிரபலங்களும் மாணவர்களுடன் கலந்துரையாடி வந்தனர். அந்த வகையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அதில் அவர் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறினார்.
அவர் தனக்கு சிறு வயதில் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நேற்று ஒளிபரப்பப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது, போட்டிகளும், ஒப்பிடுதலும் வாழ்க்கையின் ஒரு பகுதி. அது ஒன்றும் மோசமானது கிடையாது. நமது பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொண்டு, பலத்தை அதிகரிக்கவும், பலவீனத்தை மாற்றவும் உதவுகிறது. எனவே போட்டியாளர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்களை விட வித்தியாசமாக என்ன செய்ய வேண்டும் என்பதை பாருங்கள். உங்களுக்கு தேர்வு குறித்து மன அழுத்தம் எதுவும் ஏற்பட்டால் தேர்வுக்கு முந்தினம் உங்கள் பெற்றோரிடம் பேசுங்கள்.
அதற்கான காரணத்தை கண்டறியுங்கள். அதை நம்பிக்கையான ஒருவரிடம் தெரிவியுங்கள். பிரதமர் மோடி தனது ‘தேர்வு வீரர்கள்’ புத்தகத்தில் கூறியிருப்பது போல, நீங்கள் தேர்வுக்காக தயாராகும்போது சிறப்பாக உணரத் தொடங்குவீர்கள். ஒரு மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும். தூக்கம் மிகவும் முக்கியமானது. அது இலவசமாக கிடைக்கும். வெளியே சென்று போதுமான சூரிய ஒளி மற்றும் புதிய காற்றை பெற வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் தனக்கு இந்த வாய்ப்பு கொடுத்ததற்காக பிரதமர் மோடிக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.