ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகரம் தங்கர்பாளி காவல் எல்லைக்குட்பட்ட ஐ.டி.எல். கோபபந்து நகர் பகுதியில், ரூ.200 தர மறுத்ததற்காக 62 வயதான தந்தையை அவரது சொந்த மகன் தாக்கி கொன்ற பரபரப்பான சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இச்சம்பவத்தில், கடையிலிருந்தபோது தாக்கப்பட்ட ககன் பிஹாரி மல்லா என்பவர் உயிரிழந்தார். அவரை தாக்கிய அவரது இளையமகன் சந்தோஷ் மல்லா (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் ககன் பிஹாரி, தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்தார். அவர் ஐ.டி.எல். சதுக்கத்தில் சிறிய பானக் கடை நடத்தி வந்தார். வியாழக்கிழமை அன்று  வீட்டில் செய்யப்பட்ட உணவுக்கு சந்தோஷ் சண்டையிட்டு சாப்பிட மறுத்துள்ளார். பின்னர் கடைக்கு வந்து தந்தையிடம் ரூ.200 கேட்டுள்ளார்.

ஆனால், ககன் அதை மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த சந்தோஷ், கடையில் இருந்த மரக்கட்டையால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவருக்கு உதவிசெய்து ரூர்கேலா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவரை மருத்துவர்கள் உயிரிழந்ததாக அறிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக ககனின் மனைவி பிரமிலா மல்லா (60) காவல்நிலையத்தில் முறையீடு செய்தார். தொடர்ந்து சந்தோஷ் மல்லாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக தங்கர்பாளி ஆய்வாளர் நிரஞ்சன் சேதி தெரிவித்தார்.