சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே, திம்பதியான் வளவு பகுதியைச் சேர்ந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி சேட்டு (25), தனது வறுமை காரணமாக மூன்று குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இரண்டு குழந்தைகளை இழந்த நிலையில், வறுமையில் தவித்த அவர், பிறந்த பிறகு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையை, புரோக்கர்களின் உதவியுடன் விற்பனை செய்தது தெரிய வந்தது.

சமீபத்தில் சேட்டுவின் மனைவி குண்டுமல்லிக்கு, ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தையையும் விற்பனை செய்ய தீர்மானித்த சேட்டு, புரோக்கர்களான இடைப்பாடி கவுண்டம்பாளையம் செந்தில்முருகன் மற்றும் முனுசாமியை தொடர்பு கொண்டார். அவர்களால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த தேவராஜ் என்பவருடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. தேவராஜ் ரூ.1 லட்சத்திற்கு குழந்தையை வாங்க விருப்பம் தெரிவித்தாலும், சட்டப்படி தத்தெடுக்க வேண்டுமென்று வற்புறுத்தினார். ஆனால், அந்த முறையை ஏற்க மறுத்த சேட்டுவின் தகவல், குழந்தைகள் நல அதிகாரி ஸ்ரீமுரளிக்கு தெரிய வந்தது.

பின்னர் அதிகாரிகள் சேட்டுவை கைது செய்து விசாரித்தபோது, ஏற்கனவே மூன்று குழந்தைகளை விற்பனை செய்தது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சேட்டு மற்றும் புரோக்கர்கள் செந்தில்முருகன், முனுசாமி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.