மகாராஷ்டிரா மாநிலம் திட்வாலாவில் கிஷோர்(16) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவர் கடந்த 14ஆம் தேதி மும்பை காட்கோபர் ரயில் நிலையத்தில், உள்ளூர் ரயிலில் ஏறி சென்றுள்ளார். அப்போது ரயிலின் இருக்கைக்காக கிஷோருக்கும், அங்குஷ் பலேராவ் (35) என்பவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கிஷோர் பழிவாங்கும் எண்ணத்தில் இருந்துள்ளார். பலேராவ் மறுநாள் காலையில் ரயிலில் இருந்து இறங்கி, தான் வேலை பார்க்கும் மது கடையை நோக்கி சென்றார். அப்போது சிறுவன் அவரை ரகசியமாக பின் தொடர்ந்தார். அதன் பின், பின்னால் இருந்து கத்தியால் அவரைக் குத்தி விட்டு தப்பி ஓடினார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதோடு ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளியை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து சிறுவன் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த சிறுவனின், மூத்த சகோதரர் கோவந்தியைச் சேர்ந்த முகமது சனாவுல்லா பைத்தா (25) என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.