அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில், 2 வயது மாயா கெடாஹுன் என்ற சிறுமி, பிப்ரவரி 7, 2023 அன்று தன் வீட்டு முன்பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது சீவப்பு நிற தீ எறும்புகளால் கடிக்கப்பட்டு, கடுமையான அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர், பெத்தெல்ஹெம் மற்றும் கெடாஹுன், பீட்மாண்டு ஈஸ்ட் சைடு மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், இந்த மரணம் முற்றிலும் தவிர்க்கக்கூடியது எனவும், மருத்துவமனையின் தாமதம் மற்றும் குறைந்த வசதிகள் காரணமாக இந்த சோகமான முடிவு ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் கூறப்படுவதாவது, மாயாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சுவாசத்தில் சிரமம் மற்றும் உடலில் பூச்சிக்கடி ஏற்படுத்திய சிவப்புத் தீ  எறும்புகள் இருந்தன. ஆனால் மருத்துவமனை பணியாளர்கள், அவசர சிகிச்சையாக வழங்க வேண்டிய எபினெபிரின் மருந்தை 20 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக வழங்கியதாக கூறப்படுகிறது.

மேலும், குழந்தையின் ஆக்ஸிஜன் அளவு 97% இருந்தபோதும், சுவாசக்குழாய் முறை செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால் சிறுமிக்கேற்ற உபகரணங்கள் மருத்துவமனையில் இல்லை என்பது பின்னர் தெரிய வந்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுமி மாயாவின் மரணம் குறித்து அவரது பெற்றோர் மிகுந்த துயரத்தில் உள்ளனர். “மருத்துவமனை பணியாளர்கள் சரியான நேரத்தில் எபினெபிரின் மருந்தை வழங்கியிருந்தால், மாயா இன்னும் உயிருடன் இருப்பார்,” என்கிறார் வழக்கறிஞர் லாயிட் பெல்.

மேலும், இந்த மருத்துவமனை மற்றும் அதில் பணியாற்றிய மருத்துவர் சலசார்  மீது இதற்கு முன்பு இரண்டு மருத்துவ தவறுகள் தொடர்பான வழக்குகள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மாயாவின் குடும்பம் தற்போது நியாயத்தை கோரி விசாரணை மற்றும் இழப்பீடு கோரியுள்ளனர்.