டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் அவரது வீட்டில் கட்டுக்கட்டாக இருந்த பணமும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை மாலை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா சமர்ப்பித்த அறிக்கையும், சம்பந்தப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களையும் உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

மார்ச் 14 அன்று, நீதிபதி யஷ்வந்த் வர்மா இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, அவரின் இல்லத்தில் உள்ள ஒரு ஸ்டோர் ரூமில் தீயில் சுட்டு கருகிய நிலையில், பணக் கட்டுகள் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை, டெல்லி காவல் ஆணையர் நேரடியாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியிருந்தார். இந்த சம்பவத்தின் போது, நீதிபதி வர்மா வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகாருக்கு பதிலளித்த நீதிபதி யஷ்வந்த் வர்மா, “நான் மற்றும் என் குடும்பத்தினர் யாரும் அந்த ஸ்டோர் ரூமில் பணத்தை வைக்க இல்லை. அந்த பணம் எங்களுடையது என்று கூறப்படுவது முற்றிலும் தவறானது. ஊடகங்கள் விசாரிக்காமல் என்னை குற்றம் சுமத்தி இழிவுபடுத்தி வருகின்றன. அந்த அறை என் இல்லப்பகுதியில் இல்லாமல் ஊழியர்கள் பயன்படுத்தும் பகுதிக்கு அருகிலானது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிஜிஐ சஞ்சீவ் கண்ணா உத்தரவுப்படி, தற்போது 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எந்தவிதமான நீதித்துறை வேலைகளையும் அளிக்க வேண்டாம் என டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு விசாரணை உச்சநீதிமன்றம் வெளியிட்டு நேரடியாக நொடிப்பொழுதில் நடவடிக்கை எடுப்பது, இந்திய நீதித்துறை வரலாற்றில் மிகவும் அபூர்வமானதாகக் கருதப்படுகிறது.