வேலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சீனிவாசன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான் கோட்டை ரயில்வே மேம்பாலம் அருகே ஏறி இறங்கியபோது நிலைதடுமாறிய லாரி சென்டர் மீடியனில் எதிர்பாராதவிதமாக மோதியது. மேலும் மோதிய வேகத்தில் லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதற்கிடையே லாரியில் இருந்து குதித்ததால் சீனிவாசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் லாரி முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.