
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கோடு ஆர்.சி தெருவில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபிமோன்(28) திருவிதாங்கோடு சந்தையில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அபிமோன் தனது நண்பரான மெர்சின் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தக்கலை நீதிமன்றம் பகுதியில் சென்றபோது சாலையில் இருட்டான பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அபிமோன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மெர்சினை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அபிமோனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.