பெருநாட்டின் மீனவர் ஒருவர் 94 நாட்களாக கடலில் சிக்கி தவித்து வந்த நிலையில் தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அதாவது 61 வயதுடைய மேக்சிமோ நபா என்பவர் சிறிய படகில் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றார். அப்போது திடீரென பருவ நிலை மாற்றம் ஏற்பட்டதால் அவர் திசை மாறி கடலில் வேறு பாதைக்கு சென்று விட்டார். இதனால் அவர் கிட்டத்தட்ட 94 நாட்களாக கடலில் சிக்கி தவித்த நிலையில் பின்னர் ஈக்வாடாரின் ஒரு கப்பல் மூலம் அவரை கண்டுபிடித்துள்ளனர்.

இதை தொடர்ந்து சிம்போட்டே கடற்கரையில் வைத்து அவர் மீட்கப்பட்டார். இந்நிலையில் அவர் கடலில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் தனக்கு 94 நாட்களாக நடந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதாவது தண்ணீர் மற்றும் உணவின்றி அவர் இருந்த நிலையில் சிறு தீனிகள், பறவைகள் மற்றும் ஆமை போன்றவற்றை சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிறகு வீட்டிற்கு திரும்பிய அவரை அவருடைய மகள் கட்டிப்பிடித்தார். பின்னர் அவருடைய மகள்  இனேஷ் நபா  இது பற்றி கூறும் போது எங்கள் தந்தை மீண்டும் உயிரோடு வந்திருப்பது உண்மையிலேயே அதிசயம், நாங்கள் அவரை ஒரு நாள் கூட தேடாமல் இருந்ததே இல்லை என உருக்கமாக கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.