
சென்னையில் உள்ள கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக பணிபுரியும் பாலாஜி என்பவரை வடமாநிலத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று கத்தியால் குத்திய நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் பலரும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் ஆகியோர் திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய நிலையில் அரசு மருத்துவமனை நேரில் சென்று பார்த்துள்ளனர்.
இதேபோன்று பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் ஆகியோரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து நடந்த சம்பவத்திற்கு தற்போது அகில இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை வேலைநிறுத்த போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபடுவார்கள். மேலும் ஐசியூ பிரிவில் மட்டும் மருத்துவர்கள் வழக்கம்போல் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.