
மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டும் தான் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்களவையிலும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமுக எம்பிக்களை நாகரிகமற்றவர்கள் என கூறினார். மேலும் பாஜக ஆளாத மாநிலங்கள் கூட தேசிய கல்விக் கொள்கையை ஏற்று கொண்டது. அதனால் தமிழ்நாடும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய அமைச்சர் கூறினார். அவரது பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்தது.
இதனால் நேற்று ஒன்றிய அமைச்சர் தமிழ்நாடு எம்பிக்கள் நாகரிகமற்றவர்கள் என கூறியது யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் என மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வற்புறுத்தி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் ஆணித்தனமாக கூறி வருகின்றனர்.
தமிழ்நாடு ஒருபோதும் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் திட்டவட்டமாக கூறினார். இந்த நிலையில் மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அறிவுள்ளவர்கள் யாராவது முன்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்வார்களா? முழுமையாக தோல்வியடைந்த மாடலைக் கொண்டு வந்து வெற்றி அடைந்த நம்முடைய மாடலை எடுத்துவிட்டு நான் சொல்கிற தோல்வியுற்ற மாடலை பின்பற்று என்று சொன்னால் என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பியுள்ளார்.